காஞ்சீபுரத்தில் காய்கறி சந்தை கட்டுமான பணி; மேயர் ஆய்வு
காஞ்சீபுரத்தில் காய்கறி சந்தை கட்டுமான பணிகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு மாதிரி வரைபடம் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சீபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மாநகர் முழுவதும் பல்வேறு மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலைய சாலையில் இயங்கி வந்த ராஜாஜி காய்கறி சந்தையை நவீன வசதிகளுடன் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ராஜாஜி காய்கறிசந்தையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, காய்கறி சந்தையின் பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்துவிட்டு, அதே இடத்தில் தற்போது கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய காய்கறி சந்தை கட்டும் பணிக்கான பூமி பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு மாதிரி வரைபடம் கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அப்போது மண்டல குழு தலைவர் சந்துரு மற்றும் பலர் உடனிருந்தனர்.