ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நிறைவு
சேலம் மாவட்டத்தில் 194 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு
அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.19 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை நேற்று கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-
ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரித்து அதிகளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஊரக விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
100 சதவீதம் நிறைவு
இதில் 194 ஊராட்சிகளில் ஊரக விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளன. 159 ஊராட்சிகளில் பணிகள் 50 சதவீதமும், 32 ஊராட்சிகளில் உரிய இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மைதானத்திலும் குறைந்தது 2 முதல் 7 விளையாட்டு மைதானங்கள் வரை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிராஜுதீன், வெங்கட்ராமன், உதவி பொறியாளர் ஜெயதிலகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.