ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
வள்ளியூரில் ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் ரூ.1.34 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
சாலை அமைக்கும் பணி
வள்ளியூர் நகர பஞ்சாயத்து 16-வது வார்டு காமராஜர் நகரில் ரூ.1.34 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவி ராதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
வளர்ச்சி திட்டங்கள்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வள்ளியூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் எந்த வித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. பின்னர் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் வள்ளியூர் நகர பஞ்சாயத்து பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வள்ளியூரில் புதியதாக மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 360 கிராமங்களுக்கும் தாமிரபரணியில் இருந்து ராதாபுரம் வரை உள்ள வழியோர கிராமங்கள் என மொத்தம் 831 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.605 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதே போன்று எண்ணற்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஞானசேகர் நன்றி கூறினார்.