பண்ணை குட்டை அமைக்கும் பணி
ஜோலார்பேட்டை பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ணை குட்டைகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் புள்ளானேரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த ஊராட்சியில் மொத்தம் 10 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.4 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டுமான பணியை ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
நீர்மட்டம் உயரும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,400 பண்ணை குட்டைகள் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 208 ஊராட்சிகளில், 700 சமுதாய பண்ணை குட்டையாகவும், ஏனைய 700 தனி நபர் பண்ணை குட்டையாகவும் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கிறது.
ஒரு பண்ணை குட்டைக்கு ரூ.2 லட்சம் என்ற வீதம் அரசு வழங்குகிறது. 1400 பண்ணை குட்டைகளுக்கு ரூ.28 கோடி நிதி ஆகும். மேலும் பண்ணை குட்டையின் அளவு 78 அடி நீளம், 36 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழம் கொண்டதாகும்.
இந்த பண்ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாக விவசாயிகள் மீன் வளர்க்கவும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிலத்தடி நீர் மட்டம், கிணறுகளின் நீர் மட்டம் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களுடன் கலந்துரையாடல்
இதையடுத்து புள்ளானேரி ஊராட்சிக்குட்பட்ட தொண்ணையனூர் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
மேலும் பள்ளி மாணவர்கள் திருக்குறள் மற்றும் வகுப்பின் சுவரில் அமைந்திருந்த சிறு பலகையில் உள்ள தமிழ் சொற்களை படிக்க வைத்தார்.
ஆய்வின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, புள்ளானேரி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் தனபதி உள்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.