ராஜகிரி, அன்னவாசல் பகுதிகளில் பாலங்கள் கட்டும் பணிகள்


ராஜகிரி, அன்னவாசல் பகுதிகளில் பாலங்கள் கட்டும் பணிகள்
x

ராஜகிரி, அன்னவாசல் பகுதிகளில் பாலங்கள் கட்டும் பணிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை

விஜயபாஸ்கர்எம்.எல்.ஏ. ஆய்வு

விராலிமலை சட்டமன்ற தொகுதி, விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜகிரி ஊராட்சியில் கொடிக்கால்பட்டி-கூத்தக்குடி செல்லும் சாலையை மேம்படுத்தி கோரையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 2021-2022 மூலம் செயல்படுத்தப்படும் இந்த பணி சுமார் ரூ.3 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தினார். திடீரென்று அந்த பகுதியில் ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் பாலம் கட்டும் பகுதிக்கு வந்து முன்னாள் அமைச்சரை கண்டு கண்ணீர் மல்க பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

அன்னவாசல்

அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் பெரியகுளத்து கரையில் இருந்து குளவாய்ப்பட்டிவரை குளத்தின் குறுக்கே உயர்மட்ட பால கட்டுமான பணி புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை மூலமாக நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார். அப்போது, பொதுமக்கள் பலர் திரண்டு வந்து பல ஆண்டு கோரிக்கையான பாலம் கட்டும் பணியை நிறைவேற்றி கொடுத்ததற்காக எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்தனர். இதில் அன்னவாசல் ஒன்றிய பெருந்தலைவர் ராமசாமி, கருப்பையா, அழகு, ரஞ்சித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story