விபத்தை தடுக்க பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்: சங்க கூட்டத்தில் தீர்மானம்
மண்மங்கலத்தில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவை கூட்டம்
கரூர் வெண்ணைமலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்மங்கலம் வட்ட குழுவின் 6-வது வட்ட குழு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் புகழேந்தி வரவேற்று பேசினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராமன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேம்பாலம் கட்டும் பணி
கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
மண்மங்கலம், புகழூர் தாலுகாக்களை மையமாக கொண்டு மண்மங்கலத்தில் அரசு கலைக்கல்லூரி கட்ட வேண்டும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக நீச்சல் கற்றுக்கொள்ள மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட அளவில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.