பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் இயக்க திட்டம்
பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வார நாட்களில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.5 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. காலை மற்றும் மாலை உள்ளிட்ட கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதையடுத்து, அதிக பயணிகளை சுமந்து செல்லும் வகையில் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை இயக்குவதற்கு, மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
பயணிகள் கூடுதலாக மெட்ரோ ரெயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகளின் கோரிக்கைக்கு தற்காலிக தீர்வு காணாமல், நீண்ட கால தீர்வு வேண்டும் என்று கருதுகிறோம். அதற்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
6 பெட்டிகள் ரெயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யுமா? அதனை செயல்படுத்துவதற்கு செலவாகும் தொகை எவ்வளவு? என்பது தொடர்பான இந்த ஆய்வு இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும். இதற்கிடையே, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயிலை கொள்முதல் செய்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசித்து வருகிறோம்.
நிதி ஆதாரம் விரைவாக கிடைத்தால், 2 ஆண்டுகளுக்குள் 6 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில்களை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று கருதுகிறோம். 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்களை முதல் கட்டமாகவும், 3 பெட்டிகள் மற்றும் 6 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்களை 2-ம் கட்டமாகவும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.