சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை


சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்கும்பாபிஷேக யாகசாலை பூஜை
x

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதற்கால யாக பூஜை வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம்

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்துள்ளது. வருகிற 27-ந் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவிலில் கல் தூண்களில் பெயிண்ட் அடிக்கப்டப்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் மங்கள இசை, கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், அஷ்டபலி வழிபாடு, பிரவேச பலி வழிபாடு ஆகியவை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வெள்ளி கவசத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முதற்கால யாக பூஜை

வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் 1 மணிக்குள் சுகவனேசுவரர் கோவிலில் இருந்து புனிதநீர் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரங்களுக்கு கண் திறப்பு வழிபாடும், தொடர்ந்து 6 மணிக்கு மேல் கணபதி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையும், இரவு 10 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.

26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜையும், 11 மணிக்கு மேல் 1 மணிக்குள் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்துதல் நிகழ்ச்சியும், 26-ந் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.

கும்பாபிஷேக விழா

27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜை, 4-ம் கால யாக பூஜையும், காலை 7.35 மணிக்கு யாக சாலையில் இருந்து தீர்த்த கலசகுடங்கள் புறப்பாடும் நடக்கிறது. காலை 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை, விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடி மரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மூலமூர்த்தி பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரை வீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனையும், காலை 10.30 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்பாடும் நடக்கிறது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்


Next Story