தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

தென்மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவருக்கு வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் (வ.எண்.20895) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் புவனேசுவரில் இருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் ரெயிலில் (வ.எண்.20896) வருகிற 30-ந் தேதி வரை ஒரு 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி இணைக்கப்படுகிறது. அதேபோல, மேற்கு மண்டல ரெயில்வேயின் சார்பில், தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக ஓகா கோட்டை வரை இயக்கப்படும் வாராந்திர ரெயிலில் (வ.எண்.19567/19568) ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி அடுத்த மாதம் 1-ந் தேதி வரை தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து, இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இணைந்த பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இதற்கிடையே, திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள கொச்சுவேலி ரெயில் நிலையத்தில், பிளாட்பார பணிகள், ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை சீரமைப்பு ஆகியவற்றுக்கான ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22628) வருகிற 11-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதாவது இந்த ரெயில், அன்றைய தினம் மட்டும், நெல்லையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சி புறப்படும்.


Next Story