கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி:நாமக்கல்லில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி நாமக்கல்லில் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
காங்கிரஸ் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மணிக்கூண்டு அருகில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், வீரப்பன், பொறியாளர் பிரிவு தலைவர் பொன்முடி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கன்னியம்மாள், ஜோதிஸ்வரன், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம், நாமகிரிப்பேட்டை
ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி மாளிகை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி உள்பட பல இடங்களில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராமலு முரளி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம், பிரகாஷ், ராம்குமார், ஜெயபால்ராஜ், கோவிந்தராஜ், வடிவேல், பழனிசாமி, சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமகிரிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் நாமகிரிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினா். இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, துணைத் தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், நாமகிரிப்பேட்டை நகர தலைவர் இளங்கோவன், ஆர்.புதுப்பட்டி நகரத் தலைவர் தனவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மெட்டாலா நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு கிழக்கு வட்டார தலைவர் ஷேக் உசேன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். சீராப்பள்ளியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.