மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரம்:நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தைகாங்கிரசார் முற்றுகை
மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தைகாங்கிரசார் முற்றுகையிட்டனர்.
களியக்காவிளை:
மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானத்தை கொடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போலீஸ் நிலையத்தை ராஜே ஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் முற்றுகையிட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
மாணவன்
மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருடைய 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 -ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24-ந் தேதி தேர்வு எழுதுவதற்்காக பள்ளிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்புவதற்காக நின்றுகொண்டிருந்தான். அப்போது அவனிடம் குளிர்பானம் என்று கூறி அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் கொடுத்து குடிக்க கூறி உள்ளான்.
அதனை அந்த மாணவன் வாங்கி குடித்து கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஓடி வந்த சிறுவன் ஒருவன் மோதினான். இதனால் குளிர்பான பாட்டில் கீழே விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த மாணவன் வழக்கம்போல் வீட்டுக்கு வந்தான். மாணவனுக்கு இரவில் திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த போது, வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் புண்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனால் பயந்த பெற்றோர் மாணவனை நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு மாணவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தான், மாணவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுக்கப்பட்டதும், அத்தோடு சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்து இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்த நிலையில் இதுவரை குற்றவாளியை போலீசார் கண்டு பிடிக்க வில்லை என கூறி கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.