காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
தர்மபுரியில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் அறப்போராட்டங்களை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் முத்து, எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் மாதேஸ்வரன், ஐ.என்.டி.யூ.சி. பிரிவு தலைவர் சென்னகேசவன், பொதுச்செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், கட்சியின் மாநில துணைத்தலைவருமான பி.தீர்த்தராமன் கலந்துகொண்டு போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்று எழுதப்பட்ட தட்டிகளை கையில் ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் காளியம்மாள், பாலக்கோடு நகர தலைவர் கணேசன், நிர்வாகிகள் ஜெய்சங்கர், ஹரிகிருஷ்ணன், வேடி, சேகர், குமரவேல், வடிவேல், ராஜா, முனியப்பன், நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.