காங்கிரசார் ரெயில் மறியல்
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நெல்லையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நெல்லையில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.
எம்.பி. பதவி பறிப்பு
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நெல்லையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது.
இதையொட்டி நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் திரண்டனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், வக்கீல் அணி மாநில இணை தலைவர் மகேந்திரன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் காமராஜ், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், துணைத்தலைவர்கள் கவி பாண்டியன், வெள்ளபாண்டியன், அழகை கிருஷ்ணன், சிவன் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க குமார், செயலாளர்கள் மணி, சிவாஜி பாலச்சந்தர், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், முகமது அனஸ்ராஜா, கெங்கராஜ், அய்யப்பன், பரணி இசக்கி, பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், தனசிங் பாண்டியன் மற்றும் கட்சி தொண்டர்கள் ரெயில் நிலையத்துக்குள் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
ரெயில் மறியல்
அங்கு அவர்கள் 1-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்-கச்சுகுடா ரெயிலை மறிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த ரெயில் புறப்பட்டு விட்டது.
இதையடுத்து 3-வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து மத்திய பா.ஜனதா அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
136 பேர் கைது
தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பெண்கள் உள்பட மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை வேன்களில் அழைத்துச் சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையொட்டி நெல்லை சந்திப்பில் மாநகர மேற்கு துணை ேபாலீஸ் கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.