காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் - சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரம்


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் - சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 Oct 2022 9:12 PM IST (Updated: 16 Oct 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

பிரத்தியேக வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் நாளை அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நேருவின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாமல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 17-ந்தேதி(நாளை) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள் உள்ளிட்ட 9,300 பேர் அகில இந்திய அளவில் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஓட்டுப் பெட்டிகளும், ஓட்டுச் சீட்டுகளும் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 4 வாக்குப் பெட்டிகள் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தலுக்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் நாளை அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் நாளை இரவே டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். இதையடுத்து 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story