குழித்துறை, இரணியல் ரெயில் நிலையங்களில் காங்கிரசார் மறியல்
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து குழித்துறை, இரணியல் ரெயில் நிலையங்களில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 220 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து குழித்துறை, இரணியல் ரெயில் நிலையங்களில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 220 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல்காந்திக்கு சிறை தண்டனை
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் குமரி மாவட்டத்திலும் காங்கிரசார் போராட்டத்தில் குதித்தனர்.
காங்கிரசார் ரெயில் மறியல்
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலையில் குழித்துறை ெரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் தலைமையில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, திருவட்டார் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் வெர்ஜின் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
பின்னர் ரெயில் மறியலில் ஈடுபட்டதாக 200 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இரணியல் ரெயில் நிலையம்
இதேபோல் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினருமான லாரன்ஸ் தலைமையில் திங்கள்சந்தை பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜுமோன், திங்கள்சந்தை பேரூராட்சி கவுன்சிலர் ஜேக்கப், மருதூர் குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜிபின் சக்திவேல், ஜோண், ராபர்ட், ராஜன், நிஷாந்த், மணிகண்டன், ராஜேஷ், ஸ்டான்லி, அட்டன்ஸ், வேணு, நிசான் உள்பட ஏராளமானோர் நேற்று மதியம் 2.45 மணிக்கு ரெயில் நிலையத்தில் திரண்டனர்.
அப்போது கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரி சென்ற மெமோ ரெயிலுக்கு முன்பாக தண்டவாளத்தில் படுத்தும், அமர்ந்தபடியும் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராகவும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சுமார் ½ மணி நேரம் மறியலில் ஈடுபட்டவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமையில் கட்சியினர் எம்.பி. அலுவலகம் முன் இருந்து ஊர்வலமாக சென்று இந்த மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் மாநில போலிங் பூத் கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் மேற்கு மண்டல தலைவர் சிவ பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதேபோல் கன்னியாகுமரி, ஈத்தாமொழி, திங்கள்சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
ஈத்தாமொழி
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈத்தாமொழி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் அசோக்ராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் முருகேசன், விஜிலியாஸ், நாகராஜன், அசீம், விஜயகுமார், ராஜசேகர், கென்னடி, செல்லப்பன் அம்புரோஸ், அந்தோணி முத்து உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.