காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இட்டமொழி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் தலைமையில், மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், நாங்குநேரி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பஸ்நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ, பொது நிறுவனங்களின் சொத்துக்களை பெரும் முதலாளிகளுக்கு தாரை வார்த்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மேல லெத்திகுளத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.16.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளையை தொடங்கி வைத்தார். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் உள்ள கே.டி.சி.நகர் சி.எஸ்.ஐ. சர்ச் ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.97 லட்சம் மதிப்பில் கே.டி.சி.நகர் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கனகராஜ், சங்கரபாண்டியன், கீழநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இட்டமொழி பஞ்சாயத்து விஜயஅச்சம்பாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார். மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெ.நம்பித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.