காங்கிரஸ் கட்சியினர் ரெயில், சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் ரெயில், சாலை மறியல்
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து உள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ராகுல்காந்தி எம்.பி.க்கு சூரத் கோர்ட்டு ஜெயில் தண்டனை விதித்து உள்ளதை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

ஜெயில் தண்டனை

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

அப்போது, பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை சூரத் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

ரெயில் மறியல்

இதனை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரசார், மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் 1-ம் கேட் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் கீழுர் ரெயில் நிலையத்தில் நின்ற மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த வடபாகம் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 46 பேரை கைது செய்தனர்.

சாலை மறியல்

இதேபோல் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுசெயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகுட்டி, அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தென்மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரபு, மாவட்ட தலைவர் ராஜாராம் உள்பட 31 பேரை கைது செய்தனர்.


Next Story