நெய்வேலியில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகளுக்கிடையே தள்ளுமுள்ளு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நெய்வேலியில்  காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகளுக்கிடையே தள்ளுமுள்ளு  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

நெய்வேலியில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலூர்


நெய்வேலி,

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தலுக்கு விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நெய்வேலியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கடலூர் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் தேர்தல் மேலிட பார்வையாளரான தெலுங்கானா முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெற்றார். அவருடன் மாவட்ட தலைவர்கள் திலகர், செந்தில்நாதன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் உள்பட பலரும் உடனிருந்தனர்.

விருப்பமனுவை பெற மறுப்பு

இந்நிலையில் கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட துணை தலைவர் பாண்டுரங்கன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் சேகர், நகர துணைத்தலைவர் சிவசங்கர், இளைஞர் காங்கிரஸ் ஜெயமூர்த்தி, முன்னாள் வட்டார தலைவர் அன்பழகன் ஆகியோர் அங்கு வந்து கடலூர் மத்திய மாவட்டம் சார்பில் தங்களது விருப்ப மனுக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர்.

அப்போது, கடலூர் மத்திய மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் விருப்ப மனு அளிக்கநேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது, ஆனால் அப்போது வராமல் இப்போது வந்தால் எப்படி மனுக்களை பெறுவது. ஆகையால் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டு தேர்தல் மேலிட பார்வையாளர் பாஸ்கர் யாதவ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

உள்ளிருப்பு போராட்டம்

அவரது காரை கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வழிமறித்து தங்களது மனுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, நேற்று முன்தினம் உங்களது மனுக்களை பெற்றுக்கொள்ள தேர்தல் மேலிட பார்வையாளர் காத்திருந்தார், ஆனால் நீங்கள் வரவில்லை. நான் வேறு பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர், எனவே தற்போது உங்களது விருப்ப மனுக்களை வாங்க இயலாது என கூறி பாஸ்கர் யாதவ் புறப்பட்டு சென்றுவிட்டார்.

அப்போது கட்சி நிர்வாகிளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு உருவானது. இதையடுத்து, கடலூர் மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைவர் கலையரசன் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி. அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சி தலைமையிடம் புகார் அளிப்பது என்று முடிவு செய்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எம்.எல்.ஏ. மீது புகார் செய்வோம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், விருப்பமனு அளித்த விவகாரம் தொடர்பாக தேர்தல் பொறுப்பாளர்களிடம் கேட்ட போது, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகி ஒருவரை நெட்டி தள்ளினார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ பதிவு உள்ளது. இதை வைத்து கட்சி தலைமையில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story