மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரசார் பாதயாத்திரை
மத்திய அரசை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரசார் பாதயாத்திரை சென்றனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது இந்தியா பெற்ற வளர்ச்சிகள் குறித்தும், மோடி அரசின் அவலங்களை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற வகையிலும் நேற்று முதல் 75 கிலோமீட்டர் தூரம் மாபெரும் பாதயாத்திரை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சூரப்பட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் தலைமை தாங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் கருணாகரன், மாவட்ட துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் காத்தவராயன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் நகர தலைவர்கள் விக்கிரவாண்டி குமார், திண்டிவனம் விநாயகம், அனந்தபுரம் முகமதுஇத்திரிஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் தனுசு, மனித உரிமைப்பிரிவு தலைவர் சக்திவேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் மாரிமுத்து, நாராயணன், பரசுராமன், வெங்கடேசன், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் பாதயாத்திரையை முடித்தவுடன் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்டு, வருகிற 14-ந் தேதி மாலை 6 மணிக்கு திண்டிவனத்தில் தங்கள் பாதயாத்திரையை முடிக்கின்றனர்.