பஸ், ரெயில்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


பஸ், ரெயில்களில் அலைமோதிய   பயணிகள் கூட்டம்
x

தொடர் விடுமுறை முடிந்ததையொட்டி மதுரை ரெயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

மதுரை

தொடர் விடுமுறை முடிந்ததையொட்டி மதுரை ரெயில், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

தொடர் விடுமுறை

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால், வெளியூரில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி, கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

பயணிகள் கூட்டம்

இந்தநிலையில், நேற்றுடன் 3 நாள் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து மக்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட்டனர். இதனால், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வழக்கத்தை விட கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன,. இவற்றில் இருக்கை, படுக்கை கட்டணம் முறையே ரூ.450 முதல் ரூ.920 வரை வசூலிக்கப்பட்டது. இதுபோல், ஆம்னி பஸ் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கட்டணம் அதிகமாக இருந்ததாக பயணிகள் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகளையும் காணமுடிந்தது.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், "மதுரையில் இருந்து சென்னை செல்ல ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். வேறு வழியின்றி அந்த பணத்தை கொடுத்து விட்டு பயணம் செய்யும் நிலையில் இருக்கிறோம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ரெயில் நிலையம்

மதுரை ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை போன்ற நகரங்களுக்கும் வட மாவட்டங்களுக்கு செல்லவும் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். சென்னை செல்லும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு பயணிகளை ரெயில்வே போலீசார் வரிசைப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு தவிர்க்கப்பட்டது.


Related Tags :
Next Story