கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதல்
குடியாத்தம் அருகே அனுமதியின்றி நடந்த கன்று குட்டிகள் விடும் விழாவில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
குடியாத்தத்தை அடுத்த செம்பேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் சிலர் அனுமதி இன்றி கன்றுகுட்டிகள் விடும் விழா நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்ட கன்று குட்டிகளை ஓட விட்டுள்ளனர். இதனை பார்க்க சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் திரண்டு இருந்தனர்.
அப்போது கன்றுக்குட்டிகளை வாலிபர்கள் சிலர் மடக்கிய போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அப்பகுதியினர் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
உரிய அனுமதி இன்றி நடைபெற்ற கன்று குட்டிகள் விடும் நிகழ்ச்சி தொடர்பாக செம்பேடு கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு அனுமதி இன்றி நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாகவும், தகராறில் ஈடுபட்டது தொடர்பாகவும் செம்பேடு கிராமத்தை சேர்ந்த மோகன்குமார், சதீஷ், கோகுல்ராஜ் (வயது 24), கிரி, அக்ராவரம் கிராமத்தை சேர்ந்த சேட்டு (22), கவுதம் ஆகிய 6 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜ், சேட்டு ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.