இருதரப்பினர் இடையே மோதல்; 6 பேர் மீது வழக்கு
விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள இடையத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 38), வெளிப்பிரிங்கியம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (24). சம்பவத்தன்று பெரிய திருக்கோணம் மெயின் ரோட்டில் பால்ராஜுக்கு சொந்தமான டிப்பர் லாரியை மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சூர்யா டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி காலை நேரத்தில் மெயின் ரோட்டில் டிப்பர் லாரி செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பால்ராஜ், அவரது நண்பர் ராவணேஸ்வரன் மற்றும் சூர்யாவின் தந்தை காமராஜ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மோதலில் ஈடுபட்ட பால்ராஜ், ராவணேஸ்வரன், சூர்யா, காமராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் உடையார்பாளையம் சூசையப்பர்பட்டிணம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கபரியேல் (23). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் மரியபிரகாசம் (53) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.