தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற கோர்ட்டு ஊழியர்கள்


தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய முயன்ற கோர்ட்டு ஊழியர்கள்
x
நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பகவுண்டர். இவர் இறந்து விட்டார். இவருக்கு பட்டணம் கலரம்பள்ளியில் உள்ள 2 ஏக்கர் 20 சென்ட் நிலத்தை 1996-ல் ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக அரசு கையகப்படுத்தியது. அதற்காக அப்போது வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்றும், அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நாமக்கல் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கை நடத்தி வந்தனர். தற்போது ராசிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. 2008-ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுமார் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதால் மேல் முறையீடு செய்தனர். அதன்பேரில் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையொட்டி நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் தாசில்தார் சுரேஷ் மாவட்ட கலெக்டரிடம் எடுத்துச் சொல்லி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது ஜப்தி செய்யக்கூடாது என்றும் தெரிவித்ததால் கோர்ட்டு ஊழியர்கள் திரும்பிச் சென்றனர். தாசில்தார் அலுவலகத்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story