பழைய சூரமங்கலம் பகுதியில்சாலையோரம் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்தொழிலாளி கைது
பழைய சூரமங்கலம் பகுதியில் சாலையோரம் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் பழைய சூரமங்கலம் பாவாயி வட்டம் தண்ணீர் தொட்டி அருகே உள்ள சாலையோரத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது மொபட்டில் ஒருவர் ரேஷன் அரிசியை மூட்டைகளை கொண்டு வந்து இறக்கினார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜசேகர் (வயது 48) என்பதும், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் இந்த அரிசியை சேலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், மாடுகள், குதிரைகள் வைத்திருப்பவர்களுக்கும் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.