திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்குவேன்களில் கடத்த முயன்ற 3.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர்கள் 2 பேர் கைது


திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்குவேன்களில் கடத்த முயன்ற 3.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர்கள் 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேன்களில் கடத்த முயன்ற 3.6 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார், நேற்று திருவண்ணாமலை கூட்டு ரோடு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 40 பைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரன் (வயது44) என்பதும், திருவண்ணாமலையில் இருந்து ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்தனர்.

கைது- பறிமுதல்

இதே போல் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார், குருபரப்பள்ளி அடுத்த எண்ணேகொல்புதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடையளவு கொண்ட 32 பைகளில் 1.6 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சுண்டேகுப்பம் முருகேசன் (22) என்பதும், கிருஷ்ணகிரியை சேர்ந்த கோவிந்தராஜ் (எ) மெர்சல் என்பவர், கிருஷ்ணகிரி டேம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து டிரைவர் முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். அரிசியின் உரிமையாளரான கோவிந்தராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story