பெங்களூருவில் இருந்து சேலத்திற்குசரக்கு வேனில் கடத்திய 32 கிலோ குட்கா பறிமுதல் டிரைவர் கைது
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்திய 32 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சூளகிரி
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக சேலத்திற்கு சரக்கு வேனில் கடத்திய 32 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குட்கா கடத்தல்
பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சூளகிரி போலீசார், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த வேனில் மூட்டைகளில் 32 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
கைது- பறிமுதல்
அப்போது அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பகுதியை சேர்ந்த சிவா (வயது26) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், டிரைவர் சிவாவை கைது செய்தனர். மேலும் குட்கா மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த குட்கா கடத்தல் தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.