2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் குழுவினர் பச்சூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்ற தமிழக பதிவு எண் கொண்ட சரக்கு வேனை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் வேனை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வேனுடன் அரிசியை கைப்பற்றினர். பின்னர் கைப்பற்றப்பட்ட அரிசியை நாட்டறம்பள்ளி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.