மீன்பிடி உரிமம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்துவைகை அணையில் இறங்கி மீனவர்கள் போராட்டம்:பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


மீன்பிடி உரிமம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்துவைகை அணையில் இறங்கி மீனவர்கள் போராட்டம்:பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி உரிமம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து, வைகை அணையில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இங்கு அணையை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணை பயன்பாட்டிற்கு வந்த கடந்த 65 ஆண்டுகளாக மீன்பிடியை அரசே நடத்தி வந்தது.

அணையில் பிடிபடும் மீன்களில் பாதி அரசுக்கும், மீதி மீனவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனால் கடந்த ஒருமாதமாக நிறுத்தப்பட்ட மீன்பிடி கடந்த வாரம் தனியார் மூலம் தொடங்கியது. அப்போது ஏற்கனவே நடைமுறையில் இருந்த பங்கு மீன்கள் நிறுத்தப்பட்டு, பிடிக்கப்படும் மீன்களுக்கு கூலி வழங்கப்பட்டது.

மீனவர்கள் போராட்டம்

அதன்படி கட்லா, ரோகு, மிருகால் வகை மீன்களுக்கு கிலோவிற்கு ரூ.35-ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ.45-ம் வழங்கப்பட்டது. இந்த கூலி மீனவர்களுக்கு போதுமானதாக இல்லாததால், வைகை அணை மீன்பிடி உரிமையை மீண்டும் அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மீன்பிடிக்க செல்ல மறுத்துவிட்டனர். இந்நிலையில் மீன்பிடி உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டதை கண்டித்தும், அரசே மீண்டும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வைகை அணையில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் சங்கிலி, தேனி மாவட்ட பொது செயலாளர் பாரத் மற்றும் நிர்வாகிகளும் போராட்டத்தில் இறங்கினர். அப்போது வைகை அணையில் மீன்பிடியை அரசே நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.

மயங்கி விழுந்த பெண்

இதற்கிடையே போராட்டத்தின்போது வெயில் சுட்டெரித்தது. வெயில் தாங்க முடியாத மக்கள் தண்ணீரில் உடலை நனைத்து அதன்பின்னர் கரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வைகை அணையை சேர்ந்த பூங்கா (வயது 53) என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார்.

அவருக்கு உடன் இருந்த பெண்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பூங்காவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் ஆர்.டி.ஓ சிந்து, ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால், ஆண்டிப்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமலிங்கம், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா ஆகியோர் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீன்பிடி உரிமம் ஒப்படைக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story