கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஈஸ்டர் பண்டிைகயையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடலில் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

ஈஸ்டர் பண்டிைகயையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடலில் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

சுற்றுலா தலம்

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும்.

அதன்படி ஈஸ்டர் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

2 மணி நேரம் தாமதம்

ஆனால் கடலில் நீர்மட்டம் தாழ்ந்து இருந்தது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. இதனால் வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் 10 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்தனர்.

பாதுகாப்பு

மேலும் சுற்றுலா தலங்களான சுற்றுச்சூழல் பூங்கா, கடற்கரை பூங்கா, காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய அஸ்தமனம் தெரியவில்லை.

சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டதால் போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story