'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
சீலப்பாடியை அடுத்த செல்லமந்தாடி 2-வது வார்டில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன், பெண்கள் இரவில் வீடுகளைவிட்டு வெளியேறவே அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவிமணி, சீலப்பாடி.
இடிந்து விழும் நிலையில் தடுப்புச்சுவர்
கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு செல்லும் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்.
-வேல்முருகன், கொடைக்கானல்.
பெயர் பலகையை மறைக்கும் செடி-கொடிகள்
கொடைக்கானல் ரோடு ரெயில் நிலைய நடைமேடையில் 'கொடைக்கானல் ரோடு' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் செடி-கொடிகள் அடர்ந்து வளர்ந்து பெயர் பலகையை மறைக்கும் வகையில் உள்ளது. மேலும் புதர்மண்டி கிடப்பதால் அங்கு விஷ பூச்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே செடி-கொடிகளை அகற்ற வேண்டும்.
-ரதீஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.
பன்றிகள் தொல்லை
பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடை கழிவுநீரில் இறங்கி விளையாடும் பன்றிகள், பின்னர் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை கொடுக்கும் பன்றிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்பாஸ், திண்டுக்கல்.
குண்டும், குழியுமான சாலை
திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு சுப்பையர் சத்திரம் எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
குப்பைகளால் சுகாதாரக்கேடு
சின்னமனூர் நகராட்சி அய்யனார்புரத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக பராமரிக்கப்படாததால் திறந்தவெளியில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, சின்னமனூர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஆனால் குச்சனூர் பகுதியில் சாரல் மழை பெய்தாலே கோவிலுக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதன்படி கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், குச்சனூர்.
சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்
கம்பம் நகராட்சி 7-வது வார்டில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-சுந்தரி, கம்பம்.
ஒருவழிப்பாதையாக மாற்றப்படுமா?
உத்தமபாளையத்தில் இருந்து சுருளிதீர்த்தம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கு செல்லும் வாகனங்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் கோகிலாபுரம் சாலை வழியாகவே சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோகிலாபுரம் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.
-செல்வராஜ், கோகிலாபுரம்.
கூடுதல் ஏ.டி.எம். மையங்கள் வேண்டும்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒரே ஒரு ஏ.டி.எம். மையம் மட்டுமே உள்ளது. அதிலும் அவ்வப்போது பணம் எடுக்க முடியாமல் போகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் சிரமப்படுகின்றனர். எனவே மருத்துவமனை வளாகத்தில் கூடுதலாக 2 ஏ.டி.எம். மையங்களை அமைக்க வேண்டும்.
-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.
------------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
------------------