நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்


நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டது. இங்கு பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையைச் சேர்ந்தவர் மயில்வாகனன் (வயது 41). இவரும், இவருடைய தாய் உமாபாரதி, உறவினர் சிவசுந்தர் ஆகியோரும் சேர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு அன்னிய செலாவணி வர்த்தகம் செய்ய செபியின் அனுமதி பெற்று, தென்காசி தெற்கு மாசி வீதியில் 'ஏஸ் டயாஸ்' என்ற பெயரிலும், நெல்லை பாலபாக்யா நகரைச் சேர்ந்த எடிசன் என்பவர் பெயரில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 'ஏஸ் கேப்பிட்டல்' என்ற பெயரிலும் நிதி நிறுவனம் தொடங்கினர்.

தொடர்ந்து இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ரூ.10 கோடி வரை பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடிசன் அளித்த புகாரின்பேரில், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மயில்வாகனத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நெல்லை பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உமாபாரதி, சிவசுந்தர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்த நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தங்களின் அசல் ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் ராஜராஜேஸ்வரி நகரில் இயங்கி வரும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வந்து புகார் கொடுக்கலாம். மேலும் தகவலுக்கு 0462- 2554300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story