டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என புகார்: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என புகார் எழுந்ததால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை எனவும், போதிய டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை என்றும், மேலும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் புற நோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடம் தினசரி எத்தனை நோயாளிகள் வருகிறார்கள்?, நோயாளிகளின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை மொத்தமாக வழங்காமல், காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய மருந்துகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அறிவுரை
தொடர்ந்து அங்கிருந்த டாக்டர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது, அதனால் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர். அதற்கு கலெக்டர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் டாக்டர்கள் அனைவரும் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும், நோயாளிகளுக்கு உரிய முறையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனருடன் சேர்ந்து ஆய்வு செய்துள்ளேன். அதில் புறநோயாளிகள் பதிவுச் சீட்டு கொடுக்கும் இடத்தில் சரியாக பணிபுரிகிறார்களா?, நோயாளிகளுக்கு உடனுக்குடன் சீட்டு வழங்கப்படுகிறதா?, மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா?, வார்டுகள் அனைத்தும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா?, வார்டுகளில் உள்ள நோயாளிகளை டாக்டர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கிறார்களா?, கழிவறை அனைத்தும் சுத்தமாக உள்ளதா? என ஆய்வு செய்தேன். இதில் வார்டுகள், கழிவறை உள்ளிட்ட அனைத்தையும் சரியாக வைத்துள்ளனர். டாக்டர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்ற புகார் வந்தது. அது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டபோதும் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்துள்ளனர் என்றார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.