பழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தப்பட்டதாக புகார்வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு


பழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தப்பட்டதாக புகார்வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
x

பழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தப்பட்டதாக மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

பழவேற்காடு,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரிக்கரையில் 69 மீனவ கிரமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் பழவேற்காடு ஏரியிலும் வங்க கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

பழவேற்காடு ஏறியின் முகத்துவாரம் முக்கிய நீர்வழி போக்குவரத்து பகுதியாக விளங்குகிறது. இந்நிலையில் கடலில் ஏற்படும் சீற்றம் காரணமாக அடிக்கடி இந்த முகத்துவார பகுதியில் மணல் சூழ்ந்து மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மீனவர்கள் ஒன்றுசேர்ந்து, முகத்துவாரத்தில் அடைபட்ட மணல்திட்டு பகுதிகளை படகு மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் உள்ளே சென்று தூர்வாரி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழவேற்காடு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக கடந்த ஆட்சியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பின்னர் பல்வேறு துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால் பணிகள் தொடங்கவில்லை. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் மீனவர்களின் நலன் கருதி நிரந்தர முகத்துவாரம் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் முகத்துவாரம் அமைக்க தங்களிடம் உரிய அனுமதி பெறவில்லை என கூறி பணியை தொடங்க தடை விதித்தனர்.

இதனால் வேதனை அடைந்த மீனவர்கள் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மீன்வளத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பழவேற்காடு வந்து படகு மூலம் ஏரியின் முகத்துவாரத்தை ஆய்வு செய்தார்.

அப்போது 69 மீனவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், 'கடந்த 2 நாட்களுக்கு மீனவர்கள் என்னை சந்தித்து முகத்துவார நிலைப்படுத்தல் பணி நிறுத்தப்பட்டதாக புகார் தெரிவித்ததன் அடிப்படையில் நேரில் வந்து ஆய்வு செய்தேன். இதில் முகத்துவாரம் மணலால் மூடப்பட்டுள்ளதை அறிந்தேன். இந்தப் பணிகள் விவரங்களை துறை அதிகாரியிடம் வாயிலாக கேட்ட போது தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் மத்திய அரசின் இதர துறைகளின் அனுமதி பெற வேண்டி உள்ளது என தெரிந்தது. அனுமதி கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும்' என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பொன்னேரி எம்.எல்.ஏ துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டிஜே.கோவிந்தராஜன், மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, திருவள்ளூர் மாவட்டம் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் இணையத்தின் தலைவர் நாராயணன், துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story