புகார்பெட்டி


புகார்பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

தேங்கி நிற்கும் மழைநீர்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மேற்கு, 65- வதுவாா்டு, கோச்சடை பகுதியில் காளை அம்பலக்காரா் தெருவில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. சாலையில் தேங்கி தண்ணீரில் நடக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகின்றது.எனவே சாலையை சாி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகராட்சி முல்லைநகருக்குட்பட்ட ஆத்திகுளம், ஏஞ்சல் நகர் பகுதியில் குப்பைகள் சூழ்ந்து கிடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் தேங்கிய குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தேங்கி குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதீப், மதுரை.

குண்டும், குழியுமான சாலை

மதுரை சூர்யாநகர் விரிவாக்கம், மீனாட்சி அம்மன் நகர் 40 அடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியில் பள்ளிகூடம் செயல்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கண்ணன், மதுரை.

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை 84-வது வார்டு வில்லாபுரம் ஹவுசிங்போர்டு மார்க்கெட் எதிர்புறம் உள்ள தெருவில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. குப்பைகளில் நாய்கள், கால்நடைகள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் நலன்கருதி குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

நட்ராஜன், மதுரை.

சாலை அமைப்பார்களா?

மதுரை மாவட்டம் அவனியாபுரம் காட்டுமாரியம்மன் கோவில் 100-வது வார்டு மருத்துவர் காலனி பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. மேலும் வாருகால் இல்லாததால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே இப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தினேஷ், அவனியாபுரம்.

துர்நாற்றம்

மதுரை மாநகராட்சி அனுப்பானடி 89-வது வார்டு சூசை மைக்கேல் தெரு 2, 4-வது சந்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.


Next Story