புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

தஞ்சாவூர்

பள்ளி அருகே பஸ்நிறுத்தத்தில் பஸ்கள் நிற்குமா?

பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே அரசு மகளிர் பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் அந்த பள்ளிக்கு வரும் மாணவிகள் பெரும்பாலானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் தான் பள்ளிக்கு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அனைத்து டவுன் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் மாணவிகள் தூரத்தில் உள்ள பஸ்நிலையத்திற்கு சென்று பஸ்ஏறி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.

புதிய மின்கம்பம் வேண்டும்

பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுளை ஊராட்சி நறுவழிக்கொல்லை கிழக்கு தெருவில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன் காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், ஆலடிக்குமுளை.

மின்விளக்கு ஒளிருமா?

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் சாலை, நாகேஸ்வரன் கீழவீதி, தெற்கு வீதி, ஏகாம்பரேஸ்வரர் சன்னதி ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக மின்கம்பம் அமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், கும்பகோணம்.


Next Story