'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Oct 2023 2:45 AM IST (Updated: 2 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேனி

மின்கம்பத்தால் விபத்து அபாயம்

பழனி மூலக்கடையில் பள்ளிவாசல் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. போக்குவரத்து மிகுந்த அந்த பகுதியில் மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-பொதுமக்கள், பழனி.

சேதமடைந்த மருத்துவமனை மேற்கூரை

உப்புக்கோட்டை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையின் மேற்கூரை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் தற்போது மருத்துவமனை செயல்படவில்லை. கால்நடைகளுக்கு சிகிச்சை கொடுக்க டொம்புச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்.

-பாலா, உப்புக்கோட்டை.

அடிப்படை வசதி தேவை

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள காப்பிளியப்பட்டியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெரால்டு, வக்கம்பட்டி.

பஸ் நிலைய கட்டிடம் சேதம்

பட்டிவீரன்பட்டியில் உள்ள பஸ் நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் பஸ் நிலைய வளாகத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பஸ் நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், பட்டிவீரன்பட்டி.

குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டனூத்து கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. இதன் காரணமாக தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைவாக சரிசெய்ய வேண்டும்.

- கார்த்திகேயன், மொட்டனூத்து.

குடிநீர் தட்டுப்பாடு

பெரியகுளத்தை அடுத்த கெங்குவார்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்து, ஜி.கல்லுப்பட்டி.

சாலையோர மரங்கள் வெட்டி அகற்றம்

வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் சாலையில் வெள்ளனம்பட்டி அருகே சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் நிழலுக்கு கூட ஒதுங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக்கன்றுகளை நட்டு வைக்கவேண்டும்.

-பொதுமக்கள், வெள்ளனம்பட்டி.

குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வருவதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். எனவே அந்த பகுதியில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

-ராஜா, ஆண்டிப்பட்டி.

தரைப்பாலம் சீரமைக்கப்படுமா?

ஆண்டிப்பட்டியில், தேனி சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியின் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் மீது அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தை கடந்து செல்லும் போது விபத்து எற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.

-கோபாலகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி.

சாலையை அகலப்படுத்த வேண்டும்

மாரம்பாடியில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சாலையை அகலப்படுத்த வேண்டும்.

-சந்திரசேகர், மாரம்பாடி.


Next Story