மத்திய பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் அவதி


மத்திய பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் அவதி
x

மத்திய பஸ் நிலையத்தை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் அவதியடைகின்றனர்.

திருச்சி

மத்திய பஸ் நிலையம்

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், பெங்களூரு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 4.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளதால் ஏராளமான பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இதனால் 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும் பஸ் நிலையமாக திருச்சி மத்திய பஸ் நிலையம் உள்ளது.

இது தவிர, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், துப்பாக்கி தொழிற்சாலை உள்பட பல பகுதிகளுக்கும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாவட்டங்களுக்கு செல்கிற பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் இருந்தும், உள்ளூரில் பயணிக்கும் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதிகளில் இருந்தும் புறப்படும்.

ஆக்கிரமிப்பு கடைகள்

மத்திய பஸ் நிலையத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நெருக்கடியை கருத்தில் கொண்டுதான் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் மாநகர பஸ்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக காமராஜர் சிலையில் இருந்து பெரியார்சிலை வரை மத்திய பஸ் நிலையத்தையொட்டி நகர பஸ்கள் நிறுத்தும் இடங்களில் ஏராளமான தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து உள்ளன.

பயணியர் நிழற்குடையின் அருகிலேயே கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகளை தாண்டித்தான் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் அமர்ந்து பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தரைக்கடை வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியம் தான் என்றாலும், அதேநேரத்தில் பயணிகளுக்கு ஏற்படும் இன்னல்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

பஸ் நிறுத்தத்தின் முன்பு ஏராளமான கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் நகர பஸ்களை சாலையின் நடுவிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டிய அவலநிலையும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடைபெற்று வருகிறது. ஆகவே குறிப்பாக பஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story