அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராததால் பயணிகள் அவதி
தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவில் மேம்பாலம்
கோவை -பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு உள்ளது. இதை சுற்றி உள்ள கிராமங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் பண்டிகை மற்றும் விழா காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களையே நம்பி உள்ளனர்.
கிணத்துக்கடவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. அதன்பிறகு கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பொள்ளாச்சி அல்லது கோவை சென்று பஸ்களில் ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நடந்து செல்லும் பயணிகள்
இது போல் தூத்துக்குடி, நெல்லை, குட்டம், நாகர்கோவில் ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாகவே சென்று விடு கின்றன.
இதனால் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பயணி கள் கோவை சென்று மீண்டும் கிணத்துக்கடவுக்கு வர வேண்டி உள்ளது. இதனால் அவர்களுக்கு கூடுதல் நேரம் மற்றும் அலைச் சல் ஏற்படுகிறது.
அல்லது பொள்ளாச்சியில் இறங்கி அதன்பிறகு கிணத்துக்கடவுக்கு பஸ் பிடித்து வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தென்மாவட்டங்களில் இருந்து வரும் ஒரு சில அரசு பஸ் கண்டக்டர்கள், கிணத்துக்கடவில் இறங்க வேண்டும் என்று கூறும் பயணிகளிடம் கோவை டிக்கெட் எடுக்குமாறு கூறி சாலைப்புதூர் அல்லது சொலவம்பாளையம் பிரிவில் அதிகாலை நேரத்தில் இறக்கி விட்டு செல்கிறார்கள்.
இதனால் சுமையுடன் (லக்கேஜ்) வரும் பயணிகள் கிணத்துக்கடவு வரை நடந்து செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து கிணத்துக்கடவு பகுதியில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் அமைப்பதற்கு முன்பு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றன.
தற்போது மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு கோவை மற்றும் தென் மாவட்டத்தில் இருந்து வரும் அரசு விரைவு பஸ்கள் மேம்பாலம் வழியாகவே சென்று விடுகின்றன.
இதனால் கோவைக்கு டிக்கெட் எடுத்துக் கொள்கிறோம். கிணத் துக்கடவில் இறக்கி விடுங்கள் என்று கூறினாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. வேண்டுமானால் பொள்ளாச்சி டிக்கெட் எடுத்து அங்கு இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.
சில கண்டக் டர்கள், கிணத்துக்கடவு ஊருக்குள் பஸ் செல்லாது. சாலைப்புதூர் அல்லது சொலவம்பாளையம் பிரிவில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி இறக்கி விட்டு செல்கிறார்கள்.
கூடுதல் செலவு
அங்கிருந்து அதிகாலை நேரத்தில் கிணத்துக்கடவுக்கு குடும்பத்துடன் நடந்து வர வேண்டி உள்ளது. இதனால் தென்மாவட்டங்க ளில் இருந்து வரும் பெண்கள் குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இது பற்றி அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் தனியார் பஸ்கள் ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. எனவே கூடுதல் செலவு செய்து தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது.
எனவே தென்மாவட்டங்களுக்கு சென்று வரும் அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். இதன் மூலம் தென்மாவட்ட பயணிகளுக்கு கூடுதல் செலவு மற்றும் நேரமும், அலைச்சலும் மிச்சமாகும்.
எனவே பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.