ரூ.98½ லட்சத்தில் சமுதாய கூடம்
காரிமங்கலத்தில் ரூ.98½ லட்சத்தில் சமுதாய கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.
காரிமங்கலம்:
சமுதாய கூட கட்டிடம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நவீன சமுதாயகூட கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் வரவேற்றார். செந்தில்குமார் எம்.பி., தாட்கோ தலைவர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தாட்கோ மூலம் ரூ.98 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் 203 பயனாளிகளுக்கு ரூ.95 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் இலவச வீடுகள், வீட்டுமனை பட்டாக்கள், தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெண் கல்விக்கு முன்னுரிமை
விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 84.15 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு மட்டும் செலவு செய்யப்பட்டு வருகிறது. குடும்பங்களில் பெண் குழந்தைகளைப் படிக்கவைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அறிவுறுத்தினார். அந்த வகையில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் ஏறத்தாழ ரூ.2 ஆயிரம் கோடி நிதியை பெண் கல்விக்காக பயன்படுத்தி வருகிறோம். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க எந்தவித செலவும் செய்ய தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை 350 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டு பயிற்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் இந்தத் துறை மூலம் 3,955 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கறவை மாடுகள் வாங்கி பால் விற்பனை செய்ய மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் துறை மூலம் விரைவில் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், தாட்கோ தொழில்நுட்ப பொது மேலாளர் அழகு பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கதிர் சங்கர், தாட்கோ செயற்பொறியாளர் நடராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சூடபட்டி சுப்பிரமணி, ஆ.மணி, அரசு வக்கீல் கோபால், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன் உள்பட துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்கூட்டியே வந்து சென்ற எம்.எல்.ஏ.
இந்த விழா தொடங்குவதற்கு முன்பு பாலக்கோடு எம்.எல்.ஏ. கே.பி. அன்பழகன் அ.தி.மு.க.வினருடன் விழா நடந்த இடத்திற்கு வந்து புதிய சமுதாய கூடத்தை பார்வையிட்டார். அப்போது அவர், இந்த புதிய சமுதாய கூடம் அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்ள கல்வெட்டையும் இந்த சமுதாய கூடத்தில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். விழா தொடங்குவதற்கு முன்பு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.