தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Oct 2023 5:33 PM GMT (Updated: 7 Oct 2023 5:33 PM GMT)

தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மு.பெ.கிரி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மு.பெ.கிரி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தண்டராம்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், தாசில்தார் அப்துல் ரகூப், வட்டார மருத்துவ அலுவலர் செலின் மேரி, மருத்துவ அலுவலர் சத்தியா, ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செங்கம் மு.பெ.கிரி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், ''பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது திருமண நிதி உதவி வழங்கினார். பெண் பிள்ளைகள் அதிகம் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை வழங்கினார்.உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அவர் கொண்டு வந்ததோடு சொத்தில் சம உரிமை சட்டத்தையும் கொண்டு வந்தார்.

அவரது வழியில் பெண்கள் உயலர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். கர்ப்பிணிகளுக்கு 200 ரூபாயில் இருந்து இன்று 18 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை'' என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திவ்விய சபாரத்தினம், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் வால்டர் வெற்றிவேல், மேற்பார்வையாளர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story