வடலூரில்சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்பு
வடலூரில் சமுதாய வளைகாப்பு விழா நடைெபற்றது. இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டாா்.
வடலூர்,
வடலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, சமுதாய வளைகாப்பு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கர்ப்பகாலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நல்ல இசையை கேட்க வேண்டும். நல்லபுத்தகங்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். மக்கள் நல்வாழ்வு துறைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
தற்போது, மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொரோனாவுடன் மல்லு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
வள்ளலார் கூறியது போல் தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் முறையாக பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் பழனி வரவேற்றார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா ஆகியோர் பேசினர்.
மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவக்குமார், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர செயலாளர் தமிழ்செல்வன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி, நகராட்சி துணை தலைவர் சுப்புராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.