சமுதாய வளைகாப்பு
கூடலூரில் நடந்த சமுதாய வளைகாப்பில் 100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
கூடலூர்
நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கூடலூர் 1-ம் மைல் விளையாட்டு அரங்கில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அருணா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது அமைச்சர் தனது சொந்த செலவில் தலா ரூ.1,000 வழங்கினார். பின்னர் பழங்கள் மற்றும் 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, பேரூராட்சி தலைவர்கள் சித்ராதேவி, வள்ளி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.