சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சையில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தஞ்சையில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
சமுதாய வளைகாப்பு விழா
தஞ்சை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. முன்னிலை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் 2022 மற்றும் 2023-ம் ஆண்டு கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தையை வரவேற்கும் முகமாக 'வளைகாப்பு விழா' நடத்துவது இயல்பானதாகும். இருப்பினும், அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயமும் கர்ப்பிணிக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டும் முகமாகவும், கர்ப்பகாலத்தில் தங்களை பராமரித்துக் கொள்ளும் விதம் குறித்து கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த சமுதாயவளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.
ரூ.4 லட்சம் ஒதுக்கீடு
மேலும் கருவில் உள்ள குழந்தைக்கு கேட்கும் திறன் ஆறாம் மாதம் முதலே தொடங்கிவிடுவதால், தாயின் வளையலோசை கேட்டு, குழந்தையின் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, பாதுகாப்பு உணர்வுடன் நலமாக குழந்தை வளர இவ்விழா உதவி செய்கிறது, பிரசவம் குறித்து தேவையற்ற பயம் தவிர்த்து கர்ப்பிணியும் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கவும், கணவர் மற்றும் உறவினர்கள் கர்ப்பிணித் தாயை மகிழ்வுடன் வைத்துக்கொள்ள, அவர்களுக்குரிய கடமையை உணர்த்தும் விதமாகவும் இவ்விழா நடத்தப்படுகிறது. வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்துவதற்காக தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மதிய உணவு
முதல்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சையில் நடந்த வளைகாப்பு விழாவில் 300 கர்ப்பிணிகளுக்கு தாம்பூலத் தட்டுடன் கூடிய பூமாலை, வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சாத்துக்குடி, காப்பரிசி, கடலைமிட்டாய் மற்றும் வேப்பம் காப்பு வழங்கப்படுகிறது. இவற்றுடன் அனைவருக்கும் மதிய உணவு வகைகளாக எலும்பிச்சை ரதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கலும் புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அருளானந்தசாமி, மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி லதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.