கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக்கொலை: குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது


கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக்கொலை: குவாரி உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
x

க.பரமத்தி அருகே கல்குவாரிக்கு எதிராக புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கல்குவாரி உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 39) என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது.

இந்த கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயியும், சமூக ஆர்வலருமான ஜெகநாதன் (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

போலீசில் புகார்

இதற்கிடையே செல்வக்குமார் நிலப்பிரச்சினை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் கடந்த 2019-ம் ஆண்டு க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஜெகநாதன் கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.

லாரி மோதியது

இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டது தெரியவந்ததால், அதனை மூடி 'சீல்' வைத்து விட்டு சென்றனர்.

இந்தநிலையில் க.பரமத்தி அருகே காருடையாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் மீது மினி லாரி ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

இதற்கிடையில் ஜெகநாதன் மனைவி ரேவதி தனது உறவினர்களுடன், முன்விரோதம் காரணமாக ஜெகநாதனை கொலை செய்துள்ளனர் என புகார் கூறி குப்பம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உங்கள் கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கொலை வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக ரேவதி கொடுத்த புகாரின்பேரில், க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜெகநாதன் மீது மோதிய மினி லாரி கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில், கல்குவாரியை மூட காரணமாக இருந்த ஜெகநாதனை தீர்த்துக்கட்ட செல்வக்குமார் முடிவு செய்துள்ளார். பின்னர் அவர் தனது லாரி டிரைவரை ஏவி ஜெகநாதனை லாரியை ஏற்றிக்கொலை செய்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், லாரி டிரைவர் சக்திவேல் (24) மற்றும் டிரைவரின் கூட்டாளி ரஞ்சித் (44) ஆகியோரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.


Next Story