"பொது சிவில் சட்டம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்"- காதர் முகைதீன் பேட்டி
“பொது சிவில் சட்டம், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று காதர் முகைதீன் கூறினார்.
"பொது சிவில் சட்டம், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்" என்று காதர் முகைதீன் கூறினார்.
பேட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் தென்காசியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மத்திய அரசு பொது சிவில் சட்டம் என ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இப்போது அதற்கு என்ன தேவை? என்று தெரியவில்லை. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்று தான் உள்ளது. அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றால் அது இயலாத காரியம். இந்த நாட்டில் பல்வேறு மதங்கள், பல்வேறு சாதிகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவினருக்கும் பழக்கவழக்கங்களிலோ, மத வழிபாட்டிலோ, கலாசாரத்திலோ, திருமணம் போன்ற சுப காரியங்களிலோ ஒவ்வொரு நடைமுறை உள்ளது. அதனை எப்படி ஒன்று சேர்க்க முடியும்?.
குழப்பத்தை ஏற்படுத்தும்
எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவதை முறியடிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சி இப்போது இதனை சமுதாயத்தில் கிளப்பி விட்டிருப்பது நாட்டில் குழப்பத்தை தான் ஏற்படுத்தும். இந்த சட்டத்தில் என்ன ஷரத்துகள் உள்ளது? என்ன கூறப்படுகிறது? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவ்வாறு ஒருவேளை இந்த சட்டத்தில் இருக்கும் ஷரத்துகள் எல்லோருக்கும் ஏற்றவாறு இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.
வருகிற நவம்பர் மாதம் டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அழைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், துணைத்தலைவர் எஸ்.எம்.கோதர் மைதீன், துணைச்செயலாளர் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கி, மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், பொருளாளர் செய்யது இப்ராகிம், புளியங்குடி சாகுல்ஹமீது, சாம்பவர் வடகரை ரசூல் மற்றும் பலர் உடனிருந்தனர்.