மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும்-மனித உரிமை ஆணைய நீதிபதி கண்ணதாசன் பேட்டி


மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும்-மனித உரிமை ஆணைய நீதிபதி கண்ணதாசன் பேட்டி
x

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கூடங்களில் குழு அமைக்க வேண்டும்’ என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கண்ணதாசன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

'மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கூடங்களில் குழு அமைக்க வேண்டும்' என்று மனித உரிமை ஆணைய நீதிபதி கண்ணதாசன் தெரிவித்தார்.

விசாரணை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி கண்ணதாசன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகள், நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த விசாரணையில் 21 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி கண்ணதாசன் உத்தரவிட்டார்.

புதுமாப்பிள்ளை

களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் திருமணம் முடிந்த 3-வது நாளில் தன் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதால் தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், அந்த வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்து தனது வயிற்றில் உருவான கருவை அழிக்க செய்தார். அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோன்று பல்வேறு வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. இதில் ஆஜராக ஏராளமான போலீசார் மற்றும் அதிகாரிகள் சீருடை அணிந்து வந்திருந்தனர்.

மாணவர்களின் பிரச்சினை

பின்னர் நீதிபதி கண்ணதாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, அவருடைய சகோதரி சந்திராசெல்வி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு ஏற்கனவே நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. எனவே இந்த வழக்கில் மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு விசாரணை செய்ய வேண்டியது இல்லை. இருப்பினும் அந்த மாணவர் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்வோம்.

தென் மாவட்டங்களில் சாதி ரீதியான பிரச்சினை நடந்து வருகிறது. கழுகுமலையிலும் இத்தகைய மாணவர்கள் பிரச்சினை அரங்கேறியுள்ளது. அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சாதிய வித்துகளை மாணவர்கள் மனதில் விதைக்க கூடாது. மாணவர்களுக்கு இதுதொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பள்ளி ஆசிரியரிடமோ அல்லது சமூக நல அலுவலரிடமோ தெரிவிக்க வேண்டும். மேலும் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, பள்ளிக்கூடங்களில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அந்த குழு மூலம் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.

நடவடிக்கை

கந்துவட்டி பிரச்சினை குறித்து ஆணையத்தில் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர் சின்னத்துரையின் தாயாரை வாங்கிய கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டதால் முட்டிபோட்டு நிற்க வைத்த சம்பவம் குறித்து எங்கள் ஆணையத்திற்கு புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி கண்ணதாசன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவர் சின்னத்துரை, சகோதரி சந்திராசெல்வி ஆகியோரை சந்தித்து விசாரணை நடத்தினார்.


Next Story