நீலகிரி நிவாரண பணிகளை துரிதப்படுத்த குழு அமைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நீலகிரி நிவாரண பணிகளை துரிதப்படுத்த குழு அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக அவலாஞ்சி, கூடலூர், அப்பர் கூடலூர், அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் அதிகமாக மழை பெய்து வருகிறது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மீட்பு பணிகளுக்கு 04232223828, 9789800100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த குழு அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதோடு பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. ஒரு சில பகுதிகளில் சிறிய அளவில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் 22 குடும்பங்களை சார்ந்த 102 நபர்களை 5 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் வேளாண்/தோட்டக்கலைப் பயிர்களுக்கு இதர உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்து அவற்றை உடனடியாக சீரமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே பாஸ்கர் இடம் பெற்றுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 160 வீரர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பல்துறை மண்டல குழுக்களும் மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளதோடு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஜே.சி.பி இயந்திரங்கள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் தொடர்புடைய துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.