2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 24 போலீஸ்காரர்களை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சென்னை,
சென்னையில் செல்போன் பறிப்பு குற்றவாளியை மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், போலீஸ்காரர்கள் சிவகுமார், சிவலிங்கம், விஜயராம், மணிவண்ணன், யுவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். கார் திருட்டு வழக்கில் 2 நபர்களை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார், போலீஸ்காரர்கள் மணிகண்டன், சீனிவாசன், அப்பு, சக்திவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிடித்தனர்.
நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை கைது செய்து 17 பவுன் நகைகளை ஆயிரம்விளக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வினோத், போலீஸ்காரர்கள் தேவராஜன், தங்கப்பாண்டியன், சரவணன், பாண்டியன், ராஜ்குமார் ஆகியோர் மீட்டனர்.
நொளம்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன், போலீஸ்காரர்கள் முத்துசாமி, அருண்குமார், செந்தில்குமார் ஆகியோர் வாகன விபத்து வழக்கில் தொடர்புடைய நபரை கைது செய்தனர். அண்ணா ரோட்டரி சந்திப்பு அருகே முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் அனுமதி இல்லாமல் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியை நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீஸ்காரர் இளையராஜா தடுத்து நிறுத்தினார்.
அந்த வகையில் சிறப்பாக பணியாற்றிய 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 18 போலீசார் என 24 பேரையும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் வரவழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.