பூந்தமல்லியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீர் ஆய்வு


பூந்தமல்லியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 26 April 2023 3:00 AM IST (Updated: 26 April 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

உணவு பாதுகாப்பு துறை கமிஷனர்

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர். இந்த நிலையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் தமிழக உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேணா திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திடீர் ஆய்வு

அப்போது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையில் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா, பிளாஸ்டிக் பாட்டில்களில் முறையாக தண்ணீர் அடைக்கப்படுகிறதா, உணவு பாதுகாப்பு தர சான்று உள்ளதா, விதிமுறைகளை மீறி ஏதாவது செயல்படுகிறதா பழுதடைந்த கேன்களில் தண்ணீர் அடைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும் பழுதடைந்த கேன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைதொடர்ந்து பூந்தமல்லி, பாரிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மதுபான தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு ஆழ் குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எவ்வாறு எடுத்து மதுபானங்களில் கலந்து தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தார்.

நடவடிக்கை

அதுமட்டுமின்றி தண்ணீர் கேன்கள் மற்றும் மது பாட்டில்களில் ஒட்டப்பட்டுள்ள காலாவதி தேதி குறிப்பிடும் ஸ்டிக்கர்கள் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா? அதன் மூடிகள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். மேலும் உரிமம் பெறாமல் செயல்படக்கூடிய குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் விரைந்து உரிமம் பெற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ்சந்திரபோஸ் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேலவன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story