வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் தேசிய கொடி ஏற்றி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு


வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் தேசிய கொடி ஏற்றி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்-தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு
x

வணிக நிறுவனங்கள், தியேட்டர்களில் தேசிய கொடி ஏற்றி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

சேலம்

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பொ.கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

75-வது சுதந்திர தின அமுத பெருவிழா, மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் நாளை முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடி ஏற்றி வைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அன்றைய தினங்களில் தேசிய கொடியை அணிந்து பணியாற்றவும், வாடிக்கையாளர்களுக்கு தேசிய கொடியை வினியோகம் செய்யவும், அனைத்து போக்குவரத்து வாகனங்களில் தேசிய கொடியை ஒட்டி வைக்கவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் செயலிகளில், தேசிய கொடி சின்னத்தின் புகைப்படம் வைக்கவும் வேண்டும். இந்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், வணிக நிறுவனங்களின் முன் விளம்பர பலகை வைக்கப்பட வேண்டும். இந்நிகழ்ச்சியை செல்பி படம் எடுத்து http://amritmahostsav.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பான தகவல்களை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பகிர்ந்து கொண்டு, சேலம் மாவட்டத்தில் "சுதந்திர திருநாள் அமுத பெருவிழா" சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story